இலங்கையில் நேற்றைய தினம் கொவிட் – 19 வைரஸ் தொற்றாளர்களாக 490 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 517 ஆக உயர்வடைந்துள்ளது. தொற்றிலிருந்து இதுவரை 75 ஆயிரத்து 110 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். நேற்றைய தினமும் 811 பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தின் அடிப்படையில் 617 பேர் விசேட வைத்திய கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் 4 ஆயிரத்து 957 பேர் கொவிட் – 19 தொற்றுக்கான சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினமும் கொவிட் – 19 வைரஸ் பாதிப்பினால் 5 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதனடிப்படையில் நாட்டில் பதிவாகியுள்ள மரணங்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட மரணங்களில் மூன்று பெண்களும், இரண்டு ஆண்களும் உள்ளடங்குகின்றனர். அவர்களில் 33 வயதான பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார்.
இதனிடையே அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியரொருவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டதையடுத்தே அதற்கான தற்காலிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.