ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்றைய தினம் ஆரம்பமாகியது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் செயாலாளர் நாயகம் எண்டோனியோ குட்டரஸ், மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்சலட் ஆகியோர் ஆரம்ப நிகழ்வில் உரை நிகழ்த்தினர். எதிர்வரும் மார்ச் மாதம் 23ம் திகதி வரை அமர்வு இடம்பெறவுள்ள நிலையில், இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இணையத்தளம் மூலம் உரை நிகழ்த்தவுள்ளார். இலங்கைக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்த தயாராகியுள்ளதாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாடு ஏற்கனவே ஜெனீவா அலுவலகத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பக்கசார்பாக அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வருகைத்தராமல் அல்லது அவரது பிரதிநிதிகளை அனுப்பாமல் தகவல்களை பெற்றுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார். இந்நிலையில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தயாரித்துள்ள அறிக்கை நாளைய தினம் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.