உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷவிடம் இன்று கையளிக்கப்பட்டது. ஆணைக்குழுவின் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா உள்ளிட்ட ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் அறிக்கையை ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் வைத்து கையளித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி உயிர்த்தஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கென ஐவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. குறித்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 20ம் திகதி முதல் ஆணைக்குழுவின் பணிகள் ஆரம்பமாகின.
ஒன்றரை வருட காலமாக இடம்பெற்ற விசாரணைகளினூடாக 450 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த மாதம் 27ம் திகதியுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாட்டுக்காலம் நிறைவுக்கு வந்தது. இந்நிலையில் சுமார் ஒரு லட்சம் பக்கங்களைக் கொண்டதாக விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.