வலப்பனை பகுதியில் மீண்டும் சிறியளவிலான நில அதிர்வு ஏற்ப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் நிலஅதிர்வு பதிவானதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார். ரிக்டர் அளவில் 1.2 ஆக நில அதிர்வு பதிவாகியுள்ளது. வலப்பனை பகுதிக்குட்பட்ட மஹகனதராவ, பல்லேகல மற்றும் ஹக்மன ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள நில அதிர்வு அளவுகோல்களில் குறித்த அதிர்வு பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 22ம் திகதியும் வலப்பனை பகுதியில் 1.8 ரிக்டர் அளவில் நிலஅதிர்வொன்று ஏற்ப்பட்டது.
இதேவேளை பசறை – மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எக்கரிய மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இரண்டு ரிக்டர் அளவில் நில அதிர்வின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. அது குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லையெனவும் ஏற்கனவே குறித்த பகுதியில் இவ்வாறான சிறியளவிலான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாகவும் புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.