பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். பாடசாலை பஸ்கள் மற்றும் தனியார் வேன்களில் மாணவர்களை அழைத்துச்செல்லும்போது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும். போக்குவரத்து பொலிசாருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கென விசேட குழுக்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது கட்டாயமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர், அறிவுறுத்தியுள்ளார்.
மாணவர்களின் போக்குவரத்துக்கென இலங்கை போக்குவரத்து சபையின் சிசு செரிய பஸ் சேவை உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள், இன்று முதல் வழக்கம்போல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, புகையிரத பொது முகாமையாளர் டிலந்த பெனாண்டோ தெரிவித்தார்.