கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மேலும் 692 பேர் நேற்று இனங்காணப்பட்டனர். அத்துடன் கொரோனாவினால் மேலும் 3 மரணங்கள் நேற்று சம்பவித்துள்ளன.
நேற்றைய தினம் நாட்டில் மேலும், 692 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் ஐவர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள். கூடுதலான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியதுடன் அவ் எண்ணிக்கை 223 ஆகும். கம்பஹா மாவட்டத்தில் 119 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 112 பேரும் நேற்று தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதாக சுகாதாரப் பிரிவு தெரிவிக்கின்றது.
இதற்கமைய மினுவாங்கொட ஆடைக்கைத்தொழிற்சாலை மற்றும் பேலியகொட மீன் வர்த்தக சந்தையுடன் தொடர்புபட்ட கொரோனா கொத்தனி 46,435 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 40,509 பேர் தற்போது பூரண குணமடைந்துள்ளனர். நேற்றைய தினம் நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 50,231 ஆகும். இவர்களில் 6,718 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெறுகின்றனர். 652 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழுள்ளனர். நேற்று 646 பேர் பூரண குணமடைந்ததுடன் நாட்டில் இதுவரை பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43,266 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினமும் 3 கொவிட் மரணங்கள் பதிவாகின. பத்தரமுல்லையை வசிப்பிடமாகக் கொண்ட 66 வயதுடைய நபரும் கொழும்பு 15 வசிப்பிடமாகக் கொண்ட 85 வயதுடைய நபரும் கொழும்பு 10 ஐ வசிப்பிடமாகக் கொண்ட 85 வயதுடைய பெண்ணும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தனர். இதனையடுத்து நாட்டில் இதுவரை சம்பவத்திள்ள மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 247 ஆகும்.
கொரோனா தொற்றாளர்கள் சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படும் போது கூடிய சத்திரசிகிச்சைகள் முல்லேரியா ஆதார வைத்தியசாலையிலேயே இடம்பெற்றுள்ளன. நவீன வசதிகளுடன் இவ் சத்திரசிகிச்கைள் மேற்கொள்ளப்படுவதுடன் இவ்வைத்தியசாலையில் 100 தொடக்கம் 120 வரையான தொற்றாளர்கள் தங்கி நின்று சிகிச்சை பெறுகின்றனர். இங்கு மேற்கொள்ளப்படுகின்ற பணிகள் குறித்து முல்லேரியா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் துமிந்த ஆரியரத்ன கருத்து தெரிவித்தார்.
திடீரென ரப்பிட் அன்ரியன் மற்றும் பீசீஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக சுகாதாரப் பிரிவு தெரிவிக்கின்றது. நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 14,329 பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.