தயாசிறி, ஹக்கீம், வாசுதேவ ஆகியோரிடம் தொடர்பை பேணியவர்கள் இனங்காணப்பட்டனர்..
Related Articles
கொரோனா 2 ஆம் அலையின் தாக்கமானது எமது நாட்டில் பல பகுதிகளிலும் பரவியுள்ளது. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மூவர் இத்தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களுடன் தொடர்பை வைத்திருந்தவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் குறித்து தொடர்ந்தும் கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரையில் இவர்களுடன் தொடர்பை பேணிய 40 பேர் அடையாளம் காணப்ப்பட்டுள்ளனர். இவர்களில் 32 பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.
நாளையும் எதிர்வரும் 15 ம் திகதியும் பாராளுமன்ற வளாகத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் நடாத்தபடவுள்ளதனால் இதில் பங்கெடுக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ஊழியர் குழாமிடமும் கேட்டுள்ளார்.
0000
வவுனியா நகரில் அச்சுறுத்தல் காணப்படுகின்ற வலயத்திலிருந்து இதுவரை 68 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துல சேன தெரிவித்துள்ளார்;. இதனால் இவ்வலயத்தை எதிர்வரும் 21 ஆந் திகதி வரை முடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளுக்கு பிரவேசிப்பதும் அங்கிருந்து வெளியேறுவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 5 நாட்களாக தேங்கியிருந்த வடக்கின் மரக்கறி அறுவடை இன்று முதல் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
0000
இதேவேளை பொலன்னறுவ பொது வைத்தியசாலையிலிருந்து நான்கு கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து 21 ஆவது வாட் தொகுதியை மூடி அதனை பிறிதொரு இடத்தில் நடாத்திச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய நிபுணர் சம்பத் இந்திக்க குமார தெரிவித்துள்ளார். இதேவேளை குணாலி விசேட கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று பூரண குணமடைந்த 10 பேர் இன்று முற்பகல் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.