மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்து மேலதிக மரண விசாரணைகள் நடத்தப்பட்ட நான்கு சடலங்களை அரச செலவில் தகனம் செய்யுமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த சடலங்களை அடக்கம் செய்வதற்கு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு சிறைச்சாலை கைதிகள் சார்பில் ஆஜரான சட்டதரணிகள் நீதிமன்றத்தை கோரியிருந்தனர். சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான அரச சிரேஸ்ட சட்டதரணி நிஷாரா ஜயரட்ன அதனை ஆட்சேபித்தார்.
“துப்பாக்கிகளினால் சுடப்பட்டதன் மூலம் ஏற்பட்ட மரணம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து சடலங்களும் கொவிட் 19 தொற்றியவர்களுடையது என்பதை மறந்துவிட முடியாது. இதனால் தாமதம் இன்றி இவை தகனம் செய்யப்படவேண்டும். நான் நீதிமன்றத்திடம் விளக்கமளித்தேன். சட்ட மா அதிபர் சார்பில் விடுத்த அந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இன்றைய தினம் நான்கு சடலங்களை தகனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மேலதிக மரண விசாரணைகளை நடத்திய குழு எதிர்கால விசாரணைகளுக்கு தேவையான அனைத்து மாதிரிகளையும் அவர்கள் பெற்று கொண்டுள்ளதாக கூறியுள்ளனர். அதனால் அவற்றை மீண்டும் தோண்டியெடுக்க வேண்டிய தேவையிருக்காது என கூறியிருந்தனர்.”
கடந்த 29ஆம் 30ஆம் திகதிகளில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலகம் காரணமாக சிறைச்சாலை வளவு கடுமையாக சேதமாக்கப்பட்டது. சம்பவத்தில் 11 கைதிகள் உயிரிழந்தனர். 109 பேர் காயமடைந்தனர். சிறைச்சாலை கலகத்துடன் தொடர்புப்பட்ட கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.