இலாபத்தையோ நஸ்டத்ததையோ அடிப்படையாக கொண்டு சில அரச நிறுவனங்களை மூடிவிடுவதை தான் அங்கீகரிக்க போவதில்லையென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நீண்ட வரலாற்றை கொண்ட அவ்வாறான நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்திற்கு 95 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் முதலாவது வானொலி நிலையம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தை மையமாக கொண்டு 1925ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
வானொலி உலகுக்கு அறிமுகப்படுத்தி குறுகிய காலத்துக்குள் இலங்கை வானொலி ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை வானொலி துறையில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 95 வருட கால வரலாற்றை கொண்ட இலங்கை வானொலி தனது ஆண்டு நிறைவு விழாவை சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமையளித்து கூட்டுதாபன வளவில் கொண்டாடியது.
இது தொடர்பான விசேட வைபவம் இலங்கை ஒளிபரப்பு கூட்டுதாபன குமாரதுங்க கலையத்தில் இடம்பெற்றது. இலங்கை வானொலியின் ஊழியர்கள் உள்ளிட்ட அவர்களின் பிள்ளைகளும் பாராட்டப்பட்டனர். தபால் திணைக்களம், தபால் முத்திரையொன்றையும் வெளியிட்டது. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் அது கையளிக்கப்பட்டது.
ஊடக துறை அமைச்சின் செயலாளர் ஜகத் பி விஜயவீர, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவௌ, இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தின் தலைவர் விஷாரத ஜகத் விக்ரமசிங்க உள்ளிட்ட கூட்டுதாபன அதிகாரிகளும் ஊழியர்களும் இதில் கலந்து கொண்டனர்.