சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பேலியகொட மீன்விற்பனை சந்தை விரைவில் மீள திறக்கப்படுமென கடற்றொழில் அமைச்சின் ஊடகப்பேச்சாளர் நெல்சன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். பேலியகொட மீன்விற்பனை சந்தையில் எவ்வாறு கொவிட் தொற்று பரவியது என்பது குறித்து ஆராய, சுகாதார அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சுக்களினூடாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இவ்வாறு கொவிட் தொற்று பரவாத வகையில் செயற்படுவது தொடர்பில் குறித்த குழு ஆய்வுகளை மேற்கொண்டு பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்துள்ளது. அவற்றை பின்பற்றி பேலியகொட மீன்விற்பனை சந்தையை திறப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
தற்போது பேலியகொட மீன்விற்பனை சந்தையில் மீள்புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவை நிறைவுபெற்றதும், விரைவில் சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சின் ஊடகப்பேச்சாளர் நெல்சன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.