விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினம் இன்றாகும். 1992ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட முன்மொழிவிற்கமைய ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 03ம் திகதி உலகின் பல நாடுகள் விசேட தேவையுடையோருக்கான தினத்தை கொண்டாடி வருகின்றது. இலங்கையும் தொடர்ச்சியாக அதில் பங்குபற்றிவருகிறது. விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
விசேட தேவையுடையோர் தொடர்பான விடயங்களை கவனத்தில் கொள்ளல், விசேட தேவையுடையோரின் பெருமை, உரிமைகள், நலன் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு அனுசரணை வழங்குவது என்பன குறித்த தினத்தை கொண்டாடுவதற்கான நோக்கமாகும். விசேட தேவையற்ற சாதாரண குடிமகன் போன்று, விசேட தேவையுடையவர்களும் சம உரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களுடன் சமூகத்தில் வாழ சந்தர்ப்பம் காணப்படுகிறது. தற்போது உலகம் முகங்கொடுத்துள்ள கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியிலும், விசேட தேவையுடையோரின் உடல் மற்றும் உள ரீதியான ஆரோக்கியம் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
உலகின் விசேட தேவையுடைய ஒரு பில்லியன் மக்கள் தொகையில் 80 வீதமானோர் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். அதில்; 60 வயதிற்கு மேற்பட்டோரினதும் எண்ணிக்கை 46 சதவீதமென யுனெஸ்கோ அமைப்பு சுட்டிக்காட்டியுளளது. விசேட தேவையுடையோரின் எண்ணிக்கை அதிகரிப்பானது அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் அபிவிருத்தி செயற்பாடுகளை சீர்குலைக்கும் செயலாகும்.
எனினும் அதனை நாம் நேர்மறையான வழியில் நாட்டின் அபிவிருத்திக்காக ஈடுபடுத்திக் கொள்ள திட்டமிடவேண்டும். அவர்களுக்குரிய விசேட நிர்மாணத் திறன் மற்றும் ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்வதற்கு தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும். சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை மையமாகக் கொண்டு அபிவிருத்தியின் புதிய பாதையில் இலங்கை நுழைந்துள்ள ஒரு சூழ்நிலையில், விசேட தேவையுடையவர்களின் எதிர்காலம் போன்று நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை கொள்ளக் கூடிய நாளைய தினம் உருவாக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சாதாரண குடிமகனை இலக்கா கொண்டு முன்னெடுக்கப்படும் அனைத்து நலன் மற்றும் அபிவிருத்தி சார்ந்த நடவடிக்கைகளின் போதும் அதில் விசேட தேவையுடையோரின் பங்களிப்பை ஏற்படுத்துவதற்கும், அவர்களது நலனை கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும். அதன்போது அவர்களுக்கு சமூகத்தின் ஊடாக முகங்கொடுக்க நேரிடும் கஷ்டங்கள் மற்றும் தடைகள் தகர்த்தெறிந்து சமமான உரிமையை அனுபவிப்பதற்கு தேவையான பௌதீக சூழலை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கு தேவையான சமூக அணுகுமுறைகளை மாற்றி, அவர்களுக்கு பக்கபலமாக விளங்குவதற்கு இம்முறை விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தில் அனைவரும் ஒன்றிணையவேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள விசேட செய்தியில் தெரிவித்துள்ளார்.