மஹர சிறைச்சாலைக்குள் சிறை கைதிகள் வன்முறையாக செயல்படட நிலையில் நேற்றிரவு ஏற்பட்ட கலவரத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 71 பேர் காயமடைந்துள்ளதோடு சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் அதில் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜீத் ரோகன தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மஹர சிறைச்சாலையில் சிறை கைதிகள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிறை கைதிகள் சிலர் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போதே குறித்த அமைதியின்மை ஏற்பட்டது. இது கிளர்ச்சியாக உக்கிரமடைந்தததையடுத்து நிலைமைகளை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் தமது அதிகாரத்தை பயன்படுத்தியதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனிய தெரிவித்தார்.
இதன் போது துப்பாக்கி பிரயோகங்கள் பல மேற்கொள்ளப்பட்ட நிலையில் நிலைமை மேலும் மோசமடைந்தது. இதனால் அதனை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடி படையினர் அழைக்கப்பட்டனர். வன்முறையாக செயல்பட்ட சிறை கைதிகள் சிறைச்சாலையின் சொத்துக்களுக்கும் பலத்த சேதம் ஏற்படுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். சிறைக்கைதிகள் சிறைச்சாலை வளாகத்திலுள்ள சுகாதார காரியாலயம் மற்றும் களஞ்சியசாலை மற்றும் ஏனைய சில இடங்களை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். தீயை கட்டுப்படுத்துவதற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன்.
சிறைச்சாலைக்கு வெளியில் பாதுகாப்பை பலப்படுத்த 5 விசேட பொலிஸ் குழுக்கள்; வரவழைக்கப்பட்டன. குறித்த அமைதியற்ற நிலைமையை கட்டுப்படுத்த 400 இற்கும் அதிகமான பொலிசார் மற்றும் 200 விசேட அதிரடி படை வீரர்கள் மஹர சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைகளை மேற்கொள்ள விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜீத் ரோஹன தெரிவித்தார்.
“இது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெறவுள்ளன. சட்ட வைத்திய பரிசோதனை மற்றும் ஏனைய பரிசோதனைகள்இன்றுஇடம்பெறவுள்ளன. சிறைச்சாலைக்குள் இவ்வாறான வன்முறை ஏற்பட்டதையடுத்து சிறைச்சாலை சொத்துக்கள் பல உடைக்கப்பட்டுள்ளதோடு தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே சிறைச்சாலை அதிகாரிகள் தமது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளனர். பொலிசாரும் விசேட அதிரடிர படையினரும்சிறைச்சாலைக்கு வெளியிலிருந்து முழு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. சிறைச்சாலைக்குள் சிறைச்சாலை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். விமானப்படையின் ஒத்துழைப்புடன் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி உள்ளே நடக்கும் விடயங்கள் கண்காணிக்கப்பட்டு இந்நிலைமையை வழமைக்கு கொண்டு வர சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது ஓரளவு சிறைச்சாலைக்குள் நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. நேற்று மாலை 5 மணி முதல் தற்போது வரை சிறைச்சாலைக்குள் அவ்வப்போது சில சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்கென விசேட பொலிஸ் குழுக்கள் பல தற்போது அனுப்பப்பட்டுள்ளன.”
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களில் 71 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களுள் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குவதாக றாகம போதனா வைத்தியசாலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் இரண்டு அதிகாரிகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறை கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை வளவில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. சிறைச்சாலையில் நிலவிய அமைதியின்மை முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். எனினும் சிறைச்சாலையினுள் தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் கண்டறிய மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவ் விடத்திற்கு சென்றார்.