கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முடக்கப்பட்டிருந்த ஆறு பொலிஸ் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் பொரளை, வெல்லம்பிடிய, கோட்டை, மற்றும் கொம்பனிவீதி ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. எனினும் பொரளை வனாத்தமுல்ல கிராமசேவகர் பிரிவு, கொம்பனிவீதி வேகந்த கிராமசேவகர் பிரிவு ஆகியன தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் முகத்துவாரம், மட்டக்குளி, புளுமென்டல், கொட்டாஞ்சேனை, கிரேன்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம் வீதி, மாளிகாவத்தை , மருதானை, தெமட்டகொட, புரக்கோட்டை , வாழைத்தோட்டம் மற்றும் கரையோர பொலிஸ் பிரிவு பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்தில் கடவத்த மற்றும் ஜாயெல பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. எனினும் நீர்கொழும்பு, ராகம, வத்தள, பேலியகொட, களனி ஆகிய பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 8 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்தும் இடம்பெறுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
கோட்டை ரயில் நிலையத்தின் பணிகளும் வழமைக்கு திரும்பியுள்ளன. பஸ் நிலையத்திலும் வழமையான சேவைகள் ஆரம்பமாகியுள்ளன. இதேவேளை தனிமைப்படுத்தல் விடுவிக்கப்பட்ட போதிலும், பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டுமென சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.