கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கலைப் படைப்பாளர்களைக் கருத்திற்கொண்டு தொலைக்காட்சி தொடர் மற்றும் கலையக நிகழ்ச்சிகளுக்குரிய சுகாதார வழிகாட்டல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலங்கை தொலைக்காட்சி நடிகர்களின் சங்கம் மற்றும் கலைஞர்கள் மற்றும் இலங்கை இலத்திரனியல் ஒளிபரப்பாளர்கள் சங்கம் என்பன விடுத்த கோரிக்கைக்கு அமையவே அது தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது ஒளிபரப்படும் தொலைக்காட்சி தொடர்களின் எஞ்சிய பாகங்களை ஒளிப்பதிவு செய்வதற்காக மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள அல்லது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் படப்பிடிப்பை நடத்த முடியும். எனினும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து எவரும் குறித்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள நபர் ஒருவரை படப்பிடிப்பிற்காக வரவழைப்பதற்கு கடும் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் ஏற்கனவே குறிப்ப்pடப்பட்ட வழமையான சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பது கட்டாயம். முகக் கவசம் அணிதல், கைகளை கழுவுதல் உள்ளிட்ட செயற்பாடுகள் உரிய முறையில் பின்பற்றப்பட வேண்டும்.
படடிப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நபர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கையொன்றை பேணவேண்டும். படப்பிடிப்பை பார்வையிடுவதற்கு வெளி நபர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது.
இதேவேளை கலையக நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டல்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணும் வகையில் செயற்படவேண்டும். முகக் கவசம் அணிதல், கைகளை கழுவுதல் உள்ளிட்ட வழமையான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.