இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்கள் 382 பேர் இனங்காணப்பட்டனர். நேற்றைய தினத்தில் 3 கொவிட் மரணங்கள் பதிவாகியதை அடுத்து கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் 19 தொற்று காரணமாக நேற்றைய தினம் மரணங்கள் பதிவாகின. மொரட்டுவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட 84 வயதுடைய பெண்ணொருவர் வீட்டிலேயே உயிரிழந்தார். நீரிழிவு நோயுடன் கொவிட் 19 தொற்றியுள்ளமை மரணத்திற்கு காரணமென அறிவிக்கப்படுகின்றது. கொவிட் 19 தொற்றாளராக இனங்காணப்பட்டதையடுத்து தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 10 ஐ வசிப்பிடமாக கொண்ட 70 வயதுடைய ஆண் ஒருவரும் நேற்றைய தினம் உயிரிழந்தார். இவர் நீண்டகாலமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். கொழும்பு 13 ஐ வசிப்பிடமாக கொண்ட 75 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார். நீரிழிவு மற்றும் இருதய நோயுடன் கொவிட் 19 தொற்றியிருந்தமையே மரணத்திற்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலையில் இனங்காணப்பட்ட 382 கொவிட் தொற்றாளர்களில் 374 பேர் உள்ளுரைச் சேர்ந்தவர்கள், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கையைச் சேர்ந்த 5 கரையோர பாதுகாப்பாளர்களும் வெளிநாட்டைச் சேர்ந்த 3 கரையோரப் பாதுகாப்பாளர்களும் கொவிட் 19 தொற்றுக்கு உட்பட்டமை நேற்று கண்டறியப்பட்டது.
நேற்றைய தினத்திலும் அதிகூடிய தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்தே இனங்காணப்பட்டதுடன் அவ் எண்ணிக்கை 231 ஆகும். கம்பஹா மாவட்டத்தில் 42 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 20 பேரும் இனங்காணப்பட்டனர். குருநாகல் மாவட்டத்திலிருந்து 11 பேரும் காலி மாவட்டத்திலிருந்து இரண்டு பேரும் பதிவாகியதுடன் இரத்தினபுரி , கேகாலை , மொனராகலை, யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலிருந்து ஒருவர் வீதம் இனங்காணப்பட்டனர்.
போகம்பர சிறைச்சாலையிலும் நேற்று 41 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 8 பொலிஸ் அதிகாரிகளும் 5 விசேட அதிரடி படை உத்தியோகத்தர்களும் நேற்றைய தினம் இனங்காணப்பட்டவர்களில் அடங்குகின்றனர். இதற்கமைய இன்று காலை வரை மினுவாங்கொட ஆடைக் கைத்தொழிற்சாலை மற்றும் பேலிய கொட மீன் வர்த்தக சந்தை கொத்தணியின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 8 ஆயிரத்து 381 பேர் தற்போது பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 674 ஆகும். 5872 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர். பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11806 ஆக அதிகரித்துள்ளது