2021 ம் வருடத்திற்கான வரவு செலவுத்திட்ட வாசிப்பு நேரலை.. ITN News Facebook LIVE
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது நாட்டின் 75 வது வரவு செலவுத்திட்டமாகும். நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இன்று வரவுசெலவுத்திட்டத்தை சமர்பிக்கவுள்ளதுடன் பிற்பகல் 1.40 முதல் சுயாதீன தொலைக்காட்சி ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
2021 நிதி ஆண்டின் சேவைகளுக்கான செலவினத்திற்காகவும் இலங்கைக்கு உள்ளோ அல்லது வெளியேயோ கடன்களை பெற்றுக்கொள்வதற்குமான ஒதுக்கீட்டு சட்டமூலம் இரண்டாம் வாசிப்பிற்காக இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
அடுத்த ஆண்டுக்காக அரச சேவைகளுக்கான செலவினத்திற்கு 2678 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் இலங்கைக்குள்ளோ அல்லது அதற்கு வெளியேயோ 2900 பில்லியன் ரூபாவுக்கு உட்பட்ட வகையில் கடனைப் பெற்றுக்கொள்வதற்குமாக ஒதுக்கீட்டு சட்டமூலம் சமர்பிக்கப்படுகிறது.
பிரதமர் இன்று பிற்பகல் 1.40 க்கு வரவு செலவுத்திட்ட உரையை முன்வைத்ததன் பின்னர் நாளை முதல் எதிர்வரும் 21 ம் திகதி வரை வரவு செலவுத்திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும். இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறும். நாளை முதல் எதிர்வரும் 20 ம் திகதி வரை பாராளுமன்றம் முற்பகல் 9.30 முதல் மாலை 5.30 வரை கூடவுள்ளது. பின்னர் வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ம் திகதி முதல் டிசம்பர் 10 ம் திகதி வரை இடம்பெறும். 10 ம் திகதி மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறும். இன்றைய தினம் வெளிநாட்டு தூதுவர்களுக்கும் நிதி அமைச்சின் அனுமதியளிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மாத்திரம் பாராளுமன்ற கூட்டத்திற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.