கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் காலம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. மேல் மாகாண மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் அரச நிறுவனங்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் வீட்டிலிருந்து வேலைசெய்யும் வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்போது கிடைக்கப்பெற்ற அனுபவங்களை கெண்டு அத்தியாவசிய மற்றும் வேறு சேவைகளை வழங்குவதற்கு மாற்று திட்டங்களை வகுக்குமாறு நிறுவன தலைவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தவினால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கை சகல அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் பொது முகாமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு சுற்றறிக்கை பொருந்துமென அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்கள் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அவதான வலயமாக பெயரிடப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலுள்ள அரச நிறுவனங்கள் கடுமையான சுகாதார சட்டத்திட்டங்களுக்கமைய வழமைப்போன்று தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கென தமது விடயதான அம்சங்களுக்கமைய காணப்படும் அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு நிறுவனங்களின் பிரதானிகள் தனிப்பட்ட வகையில் பொறுப்புக்குரியவர்களாக காணப்படுவதாக சுற்றிறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனங்களும் தொலைவிலிருந்து முன்னெடுக்ககூடிய பணிகள் மற்றும் வீட்டிலிருந்து வேலைசெய்யும் பணியாளர்கள் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் நிறுவன பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அதனுடன் தொடர்புடைய கடித கோப்பு மற்றும் உபகரணங்களை முறையான அனுமதிக்கமைய ஊழியர்களின் வீடுகளுக்கு வழங்கவேண்டும். வீட்டிலிருந்து வேலைசெய்வதற்கு காலை 08.30 மணி முதல், மாலை 04.15 மணி வரையான காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படாத சந்தர்ப்பத்தில் தேவைக்கமைய நிறுவன பிரதானியால் அதில் மாற்றங்களை மேற்கொள்ள முடியும். வீட்டிலிருந்து வேலைசெய்யும் திட்டத்திற்குள் உள்வாங்கப்படாத ஊழியர்கள் மேலதிக மனித வள தேவை காணப்படும் நிறுவனங்களுக்கு இணைக்கப்பட வேண்டுமென சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து வேலைசெய்யும் முறையை செயற்திறனானதும், வெற்றிகரமானதுமாக முன்னெடுப்பதற்கென மாற்று தொடர்பாடல் ஊடகத்தை பயன்படுத்துமாறு நிறுவன பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. குறுந்தகவல், மின்னஞ்சல், தொலைபேசி, வட்ஸ்எப், ஸ்கைப், என்பவற்றை இதற்கென பயன்படுத்த முடியும். வீட்டிலிருந்து வேலைசெய்வதற்கு தேவையான நிதி வளங்களை வழங்குவது கணக்காளர்களின் பொறுப்பாகும்.
பொதுமக்களின் கோரிக்கைகளை தாமதமின்றி முன்வைக்கும் வகையில் சாதாரண மக்களுக்கு நேரடியான சேவைகயை வழங்கும் ஒன்லைன் தளத்தை உருவாக்க வேண்டுமென சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை வீட்டிலிருந்து வேலைசெய்வதற்கான பணிப்புரையை விடுப்பதற்கு நிறுவன பிரதானிகளுக்கு அதிகாரம் காணப்படுகிறது. எனினும் சிறியளவிலேனும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்படும் ஊழியர்களுக்கு பணிகளை வழங்க முடியாதென சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது