fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சஹ்ரான் உள்ளிட்ட குண்டுதாரிகள் பயன்படுத்திய பாணந்துறை வீட்டின் உரிமையாளர் ஆணைக்குழுவிற்கு..

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 28, 2020 13:17

சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட குண்டுதாரிகள் தங்கியிருப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பாணந்துறை சரிக்கமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றை மாதாந்தம் 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவுக்கு கூலி அடிப்படையில் பெற்றுக்கொண்டிருந்தாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்தது. இதேவேளை தற்போதைய கொரோனா நிலைமைகளைக் கருத்திற்கொண்டு ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

சரிக்கமுல்ல வீட்டிலிருந்து பயங்கரவாதிகள் சென்ற இடம் மற்றும் தாக்குதலுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்த வர்த்தக நிலையங்களின் சி.சி.டிவி காட்சிகள் நேற்றைய தினம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் காட்சிப்படுத்தப்பட்டது. சரிக்கமுல்ல வீட்டு உரிமையாளர் ஏ.எஸ்.எம் இல்ஹாம் என்பவர் வாக்குமூலம் அளிக்கும் போது இணையத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தல் ஊடாக மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் ஆகியோர் இவ் வீட்டை கூலிக்கு பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்டார். இந்த நபர் கிங்ஸ்பெரி தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட நபர் என ஆணைக்குழுவில் தெரியவந்தது.

அவர் தான் பாதணி விற்பனையில் ஈடுபடுவதாகவும் மனைவி பிள்ளைகள் மற்றும் நண்பர்களோடு இவ்வீட்டில் வசிக்க எதிர்பார்ப்பதாகவும் தன்னிடம் தெரிவித்ததாக வீட்டு உரிமையாளர் இல்ஹாம் வாக்குமூலம் அளித்தார். தாக்குதலுக்கு முன்னர் பெப்பரவரி மாதம் 13 ம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திட்டு இவ் வீட்டை அவர்களுக்கு ஒப்படைத்ததாக சாட்சியாளர் தெரிவித்தார். இதன்போது அரச சட்டத்தரணி கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடாத்திய மொஹமட் முபாரக்கின் புகைப்படத்தை சாட்சியளரிடம் காண்பித்து இவரா உங்களிடம் வீட்டை கூலிக்கு வாங்கியவர் எனக் கேட்டார்.

இதன்போது வீட்டு உரிமையாளர் இல்ஹாம் என்பவர் அதனை உறுதிப்படுத்தினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற தினத்தன்று பிற்பகல் வேளை முஸ்லிம் இளைஞர் ஒருவர் தன்னிடம் வருகை தந்து இல்ஹாம், உனது வீட்டை இராணுவம் சுற்றி வளைத்து விட்டது. எங்காவது ஓடிவிடு எனக் கூறியதாக சாட்சியாளர் ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

எனினும் தான் எவ்வித குற்றமும் செய்யாத நிலையில் வருகை தந்த அதிகாரிகளுக்கு வீட்டை காண்பித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வீடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பெண் பிரதான பொலிஸ் பரிசோதகர் நாலினி குமார திசாநாயக்கவிடம் ஆணைக்குழு சாட்சியப்பதிவுகளை மேற்கொண்டது.

அதற்கமைய குறித்த வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட விலைப்பட்டியலுக்கு அமைய அவர்கள் பொரக்கான சுப்பர் மார்க்கட் தொகுதியில் பொருட்களை கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது. அதன் சி.சி.டி.வி காட்சிகளும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டன. கட்டுவாப்பிட்டிய மற்றும் கிங்ஸ்பெரி ஹொட்டலில் குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட இருவரே அதில் இருந்தனர்.

பத்தரமுல்ல, பெலவத்த விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் 76 ஆயிரத்து 650 ரூபா பொருட்களையும் அவர்கள் கொள்வனவு செய்துள்ளனர். அதில் விசாலமான பெக் பேக் வகையைச் சேர்ந்த 10 தோள் பைகளும இருந்தன. க்ரேண்ட்பாஸ் பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் முஸ்லிம்கள் மாத்திரம் அணியும் 8 சால்வைகளை கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. பயங்கரவாதிகள் கல்கிஸ்ஸ தொடர்மாடி குடியிருப்பில் தாக்குதலுக்கு முன்னைய தினம் எடுத்த வீடியோ பதிவொன்றின் போது அவர்கள் தலையைச் சுற்றி மூடுவதற்கு இவ்வாறு கொள்வனவு செய்த சால்வைகளையே பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

சரிக்கமுல்ல வீட்டிற்கு அருகில் உள்ள சி.சி.டி.வி காட்சிகள் ஊடாக ஏப்ரல் 20 ம் திகதி வீட்டிலிருந்து பொருட்களை ஏற்றி வந்த லொரியொன்று வெளியில் சென்றமையும் பதிவாகியுள்ளது. இத்தாக்குதல் இடம்பெற்ற ஏப்ரல் 21 ம் திகதி மாலை பயங்கரவாதிகளின் நெருங்கியவர்கள் தங்கியிருந்த சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறை வீடுகளில் இப்பொருட்கள் இறக்கப்பட்டுள்ளன. சங்கிரில்லா ஹொட்டேல் குண்டுதாரிகள் இருவரும் சினமென் க்ரேண்ட் மற்றும் கிங்கஸ்பெரி தாக்குதல் தாரிகள் ஆகியோர் இந்த சரிக்கமுல்ல வீட்டிலிருந்து தாக்குதலுக்கு முதல்நாள் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 28, 2020 13:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க