பேருவளை மீன்பிடி துறைமுகத்தையும் தற்காலிகமாக மூடிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பேலியகொட மீன் வர்த்தக கட்டட தொகுதிக்கு மீன்களை எடுத்துச் சென்ற ஒருசிலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது. இத்துறைமுக வளாகத்தில் உள்ளவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
கடந்த வாரத்தில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்ற சகலரும் தமது அருகாமையில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகரிடம் தகவல்களை வழங்குமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
“நேற்றைய தினம் 309 தொற்றாளங்கள் இனங்காணப்பட்டனர். இதில் 188 பேர் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புப்பட்டவர்கள். நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளுக்கு அமையவே இவர்கள் இனங்காணப்பட்டனர். 31 பேர் கொழும்பு பகுதியிலும் கம்பஹாவில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பகுதிகளில் இருந்து 40 பேரும் இதற்கு மேலதிகமாக குளியாபிடிய பகுதியில் 14 பேரும் அடங்குகின்றனர். கடந்த 8 நாட்களுக்குள் பேலியகொட மீன் சந்தைக்கு வருகை தந்தவர்கள் இருப்பின் உடனடியாக தமது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்குட்படுங்கள். அத்துடன் உங்களது பகுதிகளுக்குரிய பொது சுகாதாரபரிசோதகர்களுக்கும் அறிய கொடுங்கள். அவரது தொலைபேசி இலக்கம் இல்லாவிட்டால் கிராமசேவகருக்கேனும் தகவலை வழங்கி அவர் மூலம் பொது பரிசோதகரை அறிவுறுத்துங்கள். வெகு விரைவில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். கொவிட் தொற்றாளர்கள் எங்குள்ளனர் என்பதை அறிய முடியாதுள்ளது. தேவையற்ற விதத்தில் பயணங்களை மேற்கொள்வதில் இருந்து தவிர்ந்து கொண்டு வீடுகளிலேயே தங்கியிருங்கள்.”