5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பரீட்சை நாடுபூராகவும் சகல மாவட்டங்களிலும் உரிய முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாலபே ஸ்ரீ ராகுல மகளிர் மகா வித்தியாலயத்துக்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இங்கு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய பரீட்சை மண்டபம் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து அமைச்சர் கண்டறிந்தார்.
நாளை சேவையில் ஈடுபடவுள்ள புகையிரதங்களில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுகென மாத்திரம் இரண்டு புகையிரத பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுடன் தாய்க்கோ அல்லது தந்தைக்கோ பயணிக்க முடியுமென, பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பரீட்சை நிறைவடைந்தவுடன் ஆங்காங்கே கூடியிருப்பதில் இருந்து தவிர்ந்துக் கொள்ளுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக நாடுபூராகவும் சிசுசெரிய பஸ் சேவையும் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கின்றது.