கொவிட் 19 தொற்றுக்கு மத்தியில் சிறந்த மனோநிலையுடன் எமக்கு முன்னால் உள்ள சவால்களை வெற்றிக்கொள்ள வேண்டியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச உளவியல் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட செய்தியிலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் உளவியல் பிரச்சினைகள் குறித்து அறிவுறுத்துவதற்காகவும் நபர்களின் உளவியல் ரீதியில் மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் ஒக்டோபர் 10ம் திகதி சர்வதேச உளவியல் தினம் கொண்டாடப்படுகின்றது. 150 நாடுகளுக்கும் கூடுதலாக உறுப்பினர்களை கொண்ட உளவியல் தினத்திற்கான பூகோள சம்மேளனத்தின் தலைமையில் 1992ம் ஆண்டில் முதல் தடவையாக சர்வதேச உளவியல் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தமது குடும்பத்தில் இருந்து விலகி நோயாளர்களை குணப்படுத்துவதற்காக இரவு பகல் பாராது அர்ப்பணிப்புச் செய்து வரும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினர் இத்தருணத்தில் நினைவுகூறப்பட வேண்டியுள்ளதாக பிரதமர் தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
பூகோள ரீதியில் முகங்கொடுத்துள்ள நிலைமைக்கு மத்தியில் சகலரும் இணைந்து சிறந்த மனோநிலையுடன் இச்சவால்களை வெற்றிக் கொள்ள வேண்டும். சவால்களை வெற்றிக் கொண்ட நாடாக இலங்கை மேலும் பலமுடன் இம்முறை சர்வதேச உளவியல் தினத்தில் செயற்பட வேண்டியுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.