கொரோனா உட்பட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக ராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
உலக குடியிருப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குடியிருப்பாளர்கள் தினம் வவுண தீவு பொது மண்டபத்தடியில் நடைபெற்றது. அனைவருக்கும் வசதியான வீடு மகிழ்ச்சியான நகரம் எனும் தொனிப்பொருளில் இலங்கையில் உலக குடியிருப்பாளர்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
உங்களுக்கு ஒரு வீடு நாட்டிற்கு எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதியின் கிராமத்திற்கு ஒரு வீடு எனும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வவுண தீவு மண்டபத்தடியில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டு மாவட்ட பணிப்பாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் குறித்த வீடு நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.