இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவும் நிலைக்கு மத்தியில் டெங்கு நோய் ஏற்படுவதை தடுப்பதற்காக அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரையிலான வாரம் நுளம்பு ஒழிப்பு வாரமாக பெயரிடுவதற்கு சுகாதார அமைச்சின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் சுகாதார மேம்பாட்டு அலுவலகதத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
டெங்கு ஒழிப்பு பணிகளுக்காக சமூகத்தை ஊக்குவித்தல் மற்றும் அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கையில் டெங்கு நோய் அனர்த்தத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடந்த ஐந்து வருட காலப்பகுதிக்கு அமைவாக இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையின் குறைவை காணக்கூடியதாக உள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்கு அமைவாக இந்த வருடத்தில் இந்த கால எல்லைப் பகுதிக்குள் பதிவான நோயளர்களின் எண்ணிக்கை 47 சதவீதமாக குறைவடைந்துள்ளது. இலங்கையில் 2018 ஆம் ஆண்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 51,659 என பதிவானது. அத்தோடு 2019 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 105,049 ஆகும். டெங்கு நோயினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 158 ஆகும். இந்த வருடத்தில் இதுவரையில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 27,870 ஆவதுடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆக பதிவாகியுள்ளது.
2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 75 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. நாட்டில் கொழும்பு, கண்டி, கம்பஹா, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இந்த வருடத்தில் ஆகக் கூடுதலான நோயாளர்கள் பதிவான மாவட்டங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளது. அத்தோடு செப்டெம்பர் மாதத்தில் பதிவான நோயாளர்களில் 24 சதவீதம் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
கட்டிடங்களை நிர்மாணித்தல், தொழிற்சாலைகள், கழிவுப்பொருட்களை அகற்றுதல், நீரை சேமித்து வைக்கும் பீப்பாய்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள், வாளி, பூச்சாடிகள் மற்றும் அகற்றப்படும் பொருட்கள் முதலானவை டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் என டெங்கு குடம்பி விஞ்ஞான ஆய்வு மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலைமையின் காரணமாக சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவியமை காரணமாக நாடு முடக்கப்பட்டமையினால் வீடுகளில் தங்கியிருந்து துப்பரவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பொது மக்களால் முடிந்தமை, பாடசாலை போன்ற பொது இடங்கள் மூடப்பட்டமை முதலான விடயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கொவிட் 19 வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக சுகாதார அமைச்சின் மூலம் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட்டு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை துப்பரவு செய்து டெங்கு நோய் பரவுவதில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக ஆகக் குறைந்த வகையில் வாரத்திற்கு 30 நிமிடங்களாவது உங்களது சுற்றாடல் பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.