அரசியல் அமைப்பின் 20 வது சீர்திருத்தம் தொடர்பான மனுக்கள் விசாரிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 20 வது சீர்திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 39 மனுக்கள் 4 வது நாளாகவும் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் மனுக்கள் ஆராயப்பட்டன. சட்டமா அதிபர் தபுல டி லிவேரா அங்கு விளக்கமளிக்கையில் அரசியல் அமைப்பின் படி சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதை உறுதிப்படுத்துவதே ஜனாதிபதியின் பொறுப்பாகும். அந்த பொறுப்பை விரிவுபடுத்தி 20 வது சீர்திருத்தத்தின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பலமான சட்டரிதியான அடிப்படையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 19 வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தினால் இழக்கப்பட்ட ஜனாதிபதியின் பொறுப்புக்கள் 20 வது சீர்திருத்தத்தின் ஊடாக மீண்டும் யாப்பில் இணைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக ஜனாதிபதிக்கு யாப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தை தடையின்றி முன்னெடுக்க முடியுமென்றும் சட்டமா அதிபர் தெரிவித்தார். ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் ஏற்படுத்துவதன் ஊடாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விடயங்களை சவாலுக்கு உட்படுத்த முடியாதென்றும் அதன் ஊடாக நீதிமன்றத்தின் அதிகாரங்கள், இரத்து செய்யப்படுவதாகவும் மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அக்குற்றச்சாட்டுக்களை நிராகரித்த சட்டமா அதிபர் ஜனாதிபதிக்கு அதிகாரங்களை மீண்டும் வழங்குவதன் ஊடாக நீதிமன்றத்தின் அதிகாரம் ஒரு போதும் இரத்து செய்யப்படுவதில்லையென தெரிவித்தார். யாப்பு ரீதியாக ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும். என்றும் அதிகாரம் மீண்டும் வழங்கப்படுவதன் ஊடாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை பரிசீலிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த வாய்ப்புக்கள் நீங்குவதாக மனுதாரர்கள், முன்வைக்கும் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் சட்டமா அதிபர் தெரிவித்தார். பாராளுமன்றம் ஏற்படுத்தப்படும் தினத்திலிருந்து ஒரு வருடத்திற்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு 20 வது சீர்திருத்தத்pன் ஊடாக ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் பாராளுமன்ற குழு நிலை விவாதத்தின் போது முன்வைக்கப்படவுள்ள உத்தேச சீர்திருத்த்தின் படி பாராளுமன்றத்தை கூட்டும் தினத்திலிருந்து இரண்டரை வருடங்கள் பூர்த்தியடைவதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதியினால் முடியுமென புதிய சீர்திருத்தம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் உரிய முறையில் செயற்படாத போது மக்களின் நலன் கருதி அதனை கலைத்து மீண்டும் புதிய மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை ஜனாதிபதியினால் மக்களுக்கு வழங்க முடியும். இதன் ஊடாக மக்களின் இறையாண்மை மேலும் பலப்படுத்தப்படுவதாக சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்படும் சட்டமூலமொன்றை மீண்டும் சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த உத்தேச 20 வது சீர்திருத்த சட்டத்தினால் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மக்களின் இறையாண்மை மீறப்படுவதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அது அவ்வாறு இடம்பெறாதென சட்டமா அதிபர் தெரிவித்தார். பாராளுமன்றத்த்pல் அதிகார போட்டியின் போது ஏதேனும் ஒரு சட்டமூலம் நிராகரிக்கப்படும் போது மக்களின் நலன்கருதி அந்த சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நேரடியாக மக்கள் மத்தியில் வைப்பதற்கு இந்த சட்டமூலத்தினால் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மக்களின் இறையாண்மை மீறப்படமாட்டதென்றும் சட்டமா அதிபர் தெரிவித்தார்.
மக்களின் இறையாண்மையை மதிக்கும் உறுப்பினர் ஒருவர் தனது மனச்சாட்சிக்கு ஏற்ப 20 வது அரசியல் அமைப்பு சீர்திருத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியுமா என்பது குறித்து தன்னுள் பாரிய பிரச்சினை இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிpட்டுள்ளார். இதுதொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்புக்களில் கருத்து வெளியிடப்பட்டன.