இன்று சர்வதேச சிறுவர் தினமாகும் எமது நாடு , எமது கரங்களில் எனும் தொனிப்பொருளில் இம்முறை தேசிய சிறுவர் தின நிகழ்வு நாளை பத்தரமுல்ல அபேகம வளாகத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெறவுள்ளது. இதேவேளை இன்று சர்வதேச முதியோர் தினமும் அனுஸ்டிக்கப்படுகின்றது.
1954 ம் ஆண்டு சிறுவர் உரிமை தொடர்பான பிரடனத்தில் 13 நாடுகள் கையொப்பமிட்டு ஐக்கிய நாடுகள் சபையினால் உலக சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஒக்டோபர் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினமாக தெரிவுசெய்யப்பட்டாலும் ஒரு சில நாடுகளில் நவம்பர் 20 ம் திகதியும் ஒக்டோபர் 19 ம் திகதியும் சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
சிறுவர்கள் விசேட படைப்பு என்பதால் அவர்களுக்கு வழங்கப்படும் பாசம், அரவணைப்பு என்பன எதிர்காலத்தில் முழுமையான ஆளுமை கொண்டவர்களாக வளர்வதற்கான அடிப்படையாக அமையும். நாட்டின் எதிர்கால சொத்து எமது சிறார்களே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது சிறுவர் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களை அறிவில் பூரணத்துவம் பெற்றவர்களாகவும், திறமையானவர்களாகவும் மாற்றுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பது முழு சமூகத்தின் பொறுப்பு , சிறுவர்களின் உடல் , உள ஆரோக்கியத்தை வளப்படுத்துவதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைப் போன்று நற்பண்பு உள்ளவர்களாக வளர்வதற்கான சூழலை உறுதிப்படுத்துவது முக்கியமானதாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நாடு தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயர்வடைந்து அபிவிருத்தி படைநிலைகளை அடைந்துகொண்டாலும், சமூகம் அன்பு, அறம் போன்ற மானிடப் பண்புகளை பெற்றிருக்காவிட்டால், அதனை ஒரு சிறந்த தேசம் என கருதமுடியாதென தான் நம்புவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது சிறுவர் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சவால்களின் ஊடாக அழகிய சிறுவர் பராயத்தை கட்டியெழுப்புவதற்கு சௌபாக்கிய எண்ணக்கருவில் அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சிறுவர்களை சௌபாக்கியம் நிறைந்த நாட்டில் , நாட்டுக்காக அர்ப்பணிக்கும் பிரஜைகளாக எதிர்கால உலகிற்கு பெற்றுக்கொடுக்க வேண்;டுமென தான் கருதுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.