20 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் 7 நாட்களுக்குள் அதற்கு எதிராக மனுதாக்கல் செய்வதற்கான அவகாசம் காணப்படுகின்றது.
உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்பை சவாலுக்குட்படுத்துவதே இதன் நோக்கம். அவ்வாறுசவாலுக்குட்படுத்தப்படாத பட்சத்தில் சீர்த்திருத்த சட்டமூலம் 7 நாட்களின் பின்னர் பாராளுமன்றத்தில் 2 வது வாசிப்புமீதான விவாதத்திற்குட்படுத்த முடியும். எனினும் குறித்த காலப்பகுதியில் 20 வது அரசியலமைப்பு திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும் தினத்திலிருந்து 21 தினங்களுக்குள் அது தொடர்பிலான தீர்ப்பை அறிவிக்க வேண்டும். உரிய காலப்பகுதியில் சட்ட வரைபு தொடர்பில் எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ள பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லையென பாராளுமன்ற செயலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
21 தினங்கள் எடுத்துக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றத்தினால் அது குறித்த தீர்ப்பு அதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டால் அதன் பின்னர் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தை மேற்கொள்ள முடியும். 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பையும் மேற்கொள்ளமுடியும். அதன் போது 20 வது அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைபு 3 இல் 2 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
அதன் பின்னர் செயற்குழு கூட்டத்தின் போது வரைபின் சகல பிரிவுகளும் ஒவ்வொன்றாக ஆராயப்படுவதோடு எந்தவொரு சீர்த்திருத்தத்திற்குமான யோசனையை முன்வைப்பதற்காக வாய்ப்பு காணப்படுகின்றது. அதன் பின்னர் 3 ஆம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்று வாக்கெடுப்பு இடம்பெறும். அதற்கு பாராளுமன்றத்தில் 3 இல் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப்பெற வேண்டும். இறுதியில் சபாநாயகர் சட்ட மூலத்தில் கையொப்பம் இட்டதும் அது சட்டமாக மாற்றம் பெறும்.