மலையகத்தில் பல்வேறு பகுதிகளிலும் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பலத்த மழையுடன் கூடிய காற்று காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக தேயிலை தோட்டங்களில் தொழில் புரிவோர் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. அத்தோடு தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி மந்த நிலையை அடைந்துள்ளது.
ஹட்டன் பொலிஸ் பிரவிற்குட்ப்பட்ட ஹெரோல் தோட்டத்தில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததின் காரணமாக லயன் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. குறித்த வீட்டில் இருந்தவர்கள் வேறு இடங்களுக்கு செல்ல வழியின்றி குறித்த குடியிருப்பிலேயே இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுண் லோ தோட்டத்தில் உள்ள 50 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் சீரற்ற காலநிலை காரணமாக அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தமது குடியிருப்புக்கள் காணப்படும் பகுதியில் பாரிய மரங்கள் காணப்படுவதால் அவை முறிந்து விழும் அபாயம் நிலவுவதாக அங்குள்ள மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மழையுடன் கூடிய காற்று வீசி வரும் இச்ச்ந்தரப்பத்தில் அச்சம் காரணமாக ஒரு சிலர் தமது பிள்ளைகளுடன் அயலவர்களின் வீடுகளில் தஞ்சம் அடையும் சூழலும் காணப்படுகிறது.