நல்லாட்சியின் ஊழல் ஒழிப்பு காரியாலயம் சட்டவிரோதமானது : நல்லாட்சியின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு
Related Articles
நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் தேசிய நிறைவேற்று சபையின் அனுமதியின் கீழ் ஸ்த்தாபிக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு செயலக காரியாலயத்தில் இடம்பெற்ற ஒருசில செயற்பாடுகள் சட்டவிரோதமானதென முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயத்திலக்க முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையானார். நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய நிறைவேற்று சபையின் தீர்மானம் காரணமாக தான் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டுள்ளதாக நிஹால் ஜயத்திலக்க தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
அதுதொடர்பாக வாக்குமூலமளிப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் ஆணைக்குழுவிற்கு வருகைதந்திருந்தார். தேசிய நிறைவேற்று சபை எந்த சட்ட வரம்பின் அடிப்படையிஸ் ஸ்த்தாபிக்கப்பட்டதென ஆணைக்குழவின் தலைவர் நீதவான் உபாலி அபேரத்ன ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பினார். எந்தவொரு சட்டரிதியிலும் அது ஸ்த்தாபிக்கப்படவில்லையென ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார்.
2015 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு உதவி வழங்கிய பல்வேறு அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவினரே குறித்த குழுவில் உள்ளடங்கியிருந்ததாகவும் அதனை தேசிய நிறைவேற்று சபையாக அடையாளப்படுத்தப்பட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதன் உறுப்பினர்களாக தானும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க , ராஜித்த சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் செயற்பட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையில் தேசிய நிறைவேற்று சபை அமைச்சரவைக்கு மேலான அதிகாரத்துடன் செயற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக ஆணைக்குழவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று சபைக்கு அமைச்சரவைக்கு மேலான விசேட அதிகாரம் வழங்கப்படவில்லையெனவும் தேசிய நிறைவேற்று சபை அனுமதியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் சுற்றிவளைப்பு , கைதுசெய்தல் நடவடிக்கை , விசாரணை , நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளும், ஊடகங்கள் ஊடாக அதனை வெளிப்படுத்துவதற்கும் அமைச்சரவையின் அனுமதியை வழங்குவதன் ஊடாக சந்தேக நபர்களை சமூகத்திலுள்ள குற்றவாளிகளாக பறைசாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆணைக்குழு ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியது. தற்போது பாருங்கள் எனக்கு நடந்த விடயத்தை பிணைமுறியின் பாரிய கொள்ளையராகவே என்னை குறிப்பிடுகின்றனர். பிணைமுறி தொடர்பான ஆணைக்குழுவினாலும் பாராளுமன்றத்திலும் எனக்கு தொடர்பு இல்லையென கூறப்பட்டுள்ளது. எனினும் ஊடக நிறுவனத்தினர், அவ்வாறு நினைப்பதில்லை.
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது சாதாரணமானதென ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். ஊழல் ஒழிப்பு செயலாளர் காரியாலயத்திற்கு கிடைக்கப்பெற்ற ஒரு சில முறைப்பாடுகள் விசாரணைகளுக்காக பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டு விசேட முறைப்பாடுகள் குறித்த குழுவிலிருந்த பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டதா என ரணிலிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. ஊழல் ஒழிப்பு செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்ற ஒருசில விடயங்கள் சட்டவிரோதமானதென ரணில் விக்கிரமசிங்க அதற்கு பதிலளித்தார். உரிய விடயங்களை மாத்திரமே முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கினோம். எது, தகுந்ததென தெரிந்து கொள்ளவேண்டும். எல்லா சந்தர்ப்பங்களிலும் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை நாட்டில் யுத்த குற்றச்சாட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அப்போதய வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர கைச்சாத்திட்டதை நீங்கள் தெரிந்திருந்தீர்காள என ஆணைக்குழுவின் தலைவர் ரணிலிடம் கேள்வி எழுப்பினார். மங்கள சமரவீர உள்ளிட்ட அமைச்சரவை அது தொடர்பில் தெரிந்திருந்ததாக ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அதுதொடர்பில் தெரிந்திருந்ததாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். அரசாங்கத்தின் சகல தரப்பினரும் அதனை அனுமதித்ததாகவும் குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க 5 மணித்தியால விசாரணையின் பின்னர் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிச்சென்றார்.
இந்நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக ஆராயும் பொலிஸ் விசாரணைப் பிரிவிற்கு இன்றைய தினம் வருகை தந்திருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
“தீவிரவாதம் தொடர்பில் தெரிந்துகொண்டு வேண்டுமென்றே எந்த விடயமும், உள்ளடங்கவில்லை. நீண்டகாலமாக இருந்த விடயங்கள் சஹ்ரானின் தாக்குதலையும் எங்களுக்கு தடுத்திருக்க கூடிய சந்தர்ப்பம் இருந்தது. புலனாய்வு பிரிவினர் இந்த விடயங்களை முஸ்லிம் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தி , முஸ்லிம் தீவிரவாத குழுவொன்று செயற்படுவதாக இருந்தால் அதுதொடர்பாக பொதுமக்களை தெளிவுபடுத்தி இவ்வாறான விடயங்களை தடுத்து, இவ்வாறானவர்களை கைதுசெய்ய எங்களால் முடிந்த விடயங்களை மேற்கொண்டிருக்கலாம்.”