கடந்த 17ம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட மின் துண்டிப்புக்கு மின்சார சபை அத்தியட்சகரின் கவனயீனமே காரணமென மின்வெட்டு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு இன்று அறிவித்துள்ளது. ஒரு வாரத்திற்குள் ஆராய்ந்து குறித்த குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்க அமைச்சர் டளஸ் அழகப்பெரும நடவடிக்கை எடுத்தார்.
கடந்த 17ம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் திடீர் மின் துண்டிப்பு ஏற்பட்டது. கெரவலபிடிய கிறீட் துணை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பரிமாற்று கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்நிலைமை ஏற்பட்டதாக மின்சார சபை அறிவித்தது.
எவ்வாறாயினும் இத்திடீர் மின் துண்டிப்பு காரணமாக பொதுமக்கள் உட்பட வர்த்தகர்களும் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர். பின்னர் ஒருசில மணிநேரங்களுக்குள் மின் துண்டிப்பை துரிதமாக வழமைக்கு கொண்டுவர மின்சார சபை நடவடிக்கை எடுத்தது. அதனையடுத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும மின் துண்டிப்பு தொடர்பாக கண்டறிவதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்தார். பேராசிரியர் ராகுல அத்தலகேவின் தலைமையில் ஏழு பேர் இக்குழுவில் அடங்கினர். எவ்வாறாயினும் இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் டளஸ் அழகப்பெரும இச்சம்பவத்துக்கு மின் சக்தி அமைச்சு பொறுப்புகூற வேண்டியதாக தெரியவந்தால் தான் அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக தெரிவித்தார். மின் துண்டிப்பு குறித்து கண்டறிய நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் இன்று தகவல் திணைக்களத்தில் விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி, குழு அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்தனர்.
“என்ன நடந்தது என்றால், கெரவலப்பிட்டிய பரிமாற்று மத்திய நிலையத்தில் வோல்டேஜின் அளவு பூச்சியத்திற்கு சென்றது. கரவலப்பிட்டிய மத்திய நிலையத்தில் இந்த பிரச்சினை ஏற்பட்டு 154 மில்லி செக்கன்களிலேயே குறித்த நிலை ஏற்பட்டது. ஒரு நிமிடத்திற்கும் குறைவான காலப்பகுதியிலேயே அது நடந்தது.”
இச்சம்பவத்துடன் தொடர்புப்பட்ட மின்சார அத்தியட்சகர் குறித்து ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என ஊடகவியலாளர்கள் இங்கு கேள்வி எழுப்பினர்.
“இலங்கை மின்சார சபையில் ஒழுக்க வரையறைகள் காணப்படுகின்றன. அதனடிப்படையில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கமுடியும். அது தொடர்பான நடவடிக்கைகளை இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது.”
அந்த அதிகாரியேதான் கட்டமைப்பின் கட்டுப்பாட்டாளருக்கு அதுதொடர்பில் அறிவித்துள்ளார். தன்னால் ஒரு தவறு நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் முழு நாட்டிலும் மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளமை அவருக்கு தெரியாது. கெரவலப்பிட்டிய உப மத்திய நிலையம் முழுவதும் மின்துண்டிப்பு ஏற்பட்டதாகவே அவர் நினைத்தார். அந்த இடத்தில்தான் ஆரம்பிக்கின்றது. குறித்த நபரை அழைத்து இந்த குழு விசாரித்தது. அவர் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டார். தன்னால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் அது ஏற்படக்கூடாத ஒரு பிரச்சினையென்றும் அவர் குறிப்பிட்டார்.
“உண்மையாக இதற்கான பொறுப்பை நாங்கள் மின்சார சபையின் அத்தியட்சகருக்கு மாத்திரம் இருப்பதாக குறிப்பிடவில்லை. அவரிடமிருந்து பொதுமுகாமையாளர் வரை அதற்கான பொறுப்பு, செயற்பாட்டு மற்றும் நிர்வாக வரையறைகள் முறையாக இடம்பெறாமை குறித்து காணப்படுகின்றது. “
இதேவேளை இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் டளஸ் அழகப்பெரும குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இவ்வாறான மின் துண்டிப்புக்கள் மீண்டும் ஏற்படாது இருக்க மின் உற்பத்தி திட்டம் ஒன்றை ஏற்படுத்த போவதாக தெரிவித்தார்.
“மறைப்பதற்கு எந்தவொரு காரணமும் இல்லையென்பதும், இடம்பெறும் சகல விடயங்களையும் வரி செலுத்தும் இந்த நாட்டின் நுகர்வோர் தெரிந்துகொள்ளவே;ணடுமென்பதே எங்களது கொள்கை , அதனடிப்படையில் இதனைநான் சபையில் சமர்ப்பிப்பதற்காக நடவடிக்கை எடுக்கின்றேன். எதிர்காலத்தில் பாரிய மின் நெருக்கடி நிலை ஏற்படக்கூடும். நாங்கள் இதனை முகாமைத்துவப்படுத்தாவிட்டால், அவ்வாறு தவறொன்றை புரிந்த அத்தியட்சகர் ஒருவர் இருக்கின்றார். மின் பொறியியலாளரை எடுத்துக்கொண்டால் சர்வதேச ரீதியில் போட்டியிடக்கூடிய திறன் வாய்ந்த அதிகாரிகள் எங்களிடமுள்ளனர். அதிகாரிகள் தொடர்பில் குறை கூறாமல் நாட்டிற்கு தேவையான தேசிய மின் உற்பத்தி திட்டமொன்றை நாம் தயாரிக்க வேண்டும்.“
[ot-video type=”youtube” url=”https://youtu.be/Crn8R54CT7A”]