வெள்ளை வேன் சம்பவத்திற்காக ராஜித்தவுக்கும் ரூமிக்கும் குற்றப்பத்திரிகை : வெளிநாட்டு பயணங்களுக்கும் தடை
Related Articles
பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய வெள்ளை வேன் ஊடக சந்திப்பை நடத்தி ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தியதாகவே ராஜித சேனாரட்ன மற்றும் மொஹட் ரூமி ஆகிய இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. இவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் சட்ட மாஅதிபர் குற்றப்பத்திரிகைகளை கையளித்தார். அதனை தொடர்ந்து ஒரு பிரதிவாதிக்கு 10 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். பிரதிவாதிகள் இருவரினதும் விரல் அடையாளங்களை பெற்று கொண்டு அறிக்கையொன்றை கோறுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டமையையடுத்து நீதிமன்றத்தில் அரச பிரதி சொலிசிட்ட ஜெனரல் திலீப்ப பீரிஸ் இவ்வழக்கின் பிரதிவாதிகள் ஆரம்ப கட்டத்தில் நீதிமன்றத்தை புறக்கணித்து செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
எனினும் அவர்கள் வழக்கு விசாரணைகளுக்காக தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகுவதை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸ் நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டுமென்ற நிபந்தனையை விதிக்க வேண்டுமென நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். இவ்வாறான ஒருநிபந்தனை தேவையற்றது என தெரிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி பிரதிவாதிகள் இருவரினதும் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்ததுடன், இதுகுறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.
மற்றுமொரு கோரிக்கையை முன்வைத்து இவ்வழக்கின் சாட்சியாளராக குறிப்பிடப்பட்டுள்ள நான்கு ஊடக நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய இருவட்டு தற்போது நீதிமன்றத்தில் காணப்படுவதாகவும் அவற்றை பெற்று கொள்ள உத்தரவு பிறப்பிக்குமாறும் பிரதி சொலிசிட்ட ஜெனரல் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி தற்போது கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உள்ள அவ்விருவட்டை மேல் நீதிமன்றத்துக்கு பெற்று கொள்ளுமாறு பதிவாளருக்கு அறிவித்தார். மேலதிக வழக்கு விசாரணைகள் அடுத்த மாதம் 22ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.