நாடுபூராகவும் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்றைய தினத்திலும் பல்வேறு போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு கிலோவுக்கும் கூடுதலான ஹெரோயின் போதைப்பொருளுடன் கொலன்னாவ நகர சபையின் மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
பாதுக்க, அங்கம்பிட்டிய பகுதியில் வீடொன்றிலிருந்து 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அதனையடுத்து துண்னான பகுதியில் மற்றுமொரு நபர் 300 கிராம் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டார். இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது கொலன்னாவ பகுதியில் அதிசொகுசு வீடு தொடர்பான தகவல்கள் தெரியவந்ததுடன் அங்கிருந்து மேலும் ஒரு கிலோ கிராம் 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது. அத்துடன் போதைப்பொருளை விநியோகித்த நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டார். இவர் கொலன்னாவ நகரசபையின் மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார். மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது முச்சக்கர வண்டியொன்றில் போதைப்பொருளை எடுத்துச்சென்ற நபர் ஒருவும் 10 கிராம் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட இவர்கள் போதைப்பொருளை எடுத்துச்செல்வதற்காக நவீனரக மோட்டார் கார், இரண்டு முச்சக்கர வண்டிகள், 14 செல்லிடத் தொலைபேசிகள், இலத்திரனியல் தராசு உள்ளிட்ட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. சந்தேக நபர்கள் ஹோமாகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
தெமட்டகொட பேஸ்லைன் வீதிக்கு அருகாமையிலும் 200 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். 31 வயதுடைய இவர் கிருளப்பனையை வசிப்பிடமாக கொண்டவர். தெமட்டகொட ஸ்ரீ தம்ம மாவத்தையிலும் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது 101 கிராமும் 845 மில்லிகிராம் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் இப்பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்கள். நிட்டம்புவ கல்லப்பிட்டிய பகுதியிலும் 2 கிராம் 350 மில்லிகிராம் ஹெரொயினுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இந்த அனைத்து சந்தேக நபர்களும் இன்றைய தினத்தில் குறித்த மெஜிஸ்ரேட் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.