அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இதுவரை ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதியில் ஆயிரத்து 863 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவுக்கு 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 08ம் திகதி முதல் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.
அரச அதிகாரிகள், அரச நிறுவனங்களின் ஊழியர்கள், ஆயுத படைகளின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் சேவை தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் புலனாய்வு பிரிவுகளினூடாக அரசியல் பாதிப்புக்குள்ளான வழக்குகளை விசாரிக்குமாறும் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.