மின்சக்தி துறையில் புதிய மைல்கல்லாக அமையும் இலங்கையின் மிகப்பெரிய காற்றலை மின் உற்பத்தி நிலையமான மன்னார் மின் உற்பத்தி நிலைய நிர்மாண பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் குறித்த மின் உற்பத்தி நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின் சாரத்தை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க முடியுமென இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
நீர் மின் உற்பத்தி நிலையங்களை பிரதானமாக கொண்டு மின் சக்தி துறையை மேம்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் சகல பாகங்களுக்கும் மின்சாரத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அதுதொடர்பான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய மின் கட்டமைப்புக்கு கூடுதலான மின்சாரம் நீர் மின் உற்பத்தி நிலையங்களின் ஊடகவே பெற்றுக்கொடுக்கப்படுகின்றது.
சுமார் ஆயிரத்து 400 மெகாவோட்ஸ் மின்சாரம் நீர் மின் உற்பத்தி நிலையங்களின் ஊடாக பெறப்படுகின்றது. சௌபாக்கிய எண்ணக்;கருவின் கொள்கைகளுக்கு அமைய விசேட கவனம் செலுத்தப்பட்டு மீள் சுழற்சி எரிசக்தி துறையை மேம்படுத்துவது குறித்து யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் காற்றலை மின் உற்பத்தி நிலைய நிர்மாண பணிகள் துரிதப்படுத்தப்பட்டது.
கடந்த 5 வருடங்களாக குறித்த காற்றலை மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் மந்தகதியில் இடம்பெற்றுவந்தமையால் இலங்கை மின்சார சபைக்கு 50 மில்லியன் ரூபாவரை நாளாந்த நட்டம் ஏற்பட்டு வருகின்றது. எரிபொருள் ஊடாக மின் உற்பத்தி நிலையங்களை முன்னெடுத்து செல்கின்றமையால் கூடுதலான செலவை ஏற்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. மன்னார் காற்றலை மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய நிலை காணப்படுவதோடு தேசிய மின் கட்டமைப்புக்கு 100 மெகாவோட் மின்சாரத்தை இணைக்க கூடிய வாய்ப்பும் காணப்படுகின்றது. அதன் ஊடாக இலங்கை மின்சார சபை 10 மில்லியன்களை சேமிக்க கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது. 3.45 கொள்ளளவைக் கொண்ட 30 அதிநவீன காற்றலை டேர்பைன் இயந்திரங்கள் குறித்த காற்றலை மின் உற்பத்தி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மேலும் இரண்டு காற்றலை மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.