இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் குழு இன்று அவசரமாக கூடவுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. தேசிய பட்டியல் தெரிவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல்குழு இன்று முற்பகல் 11 மணிக்கு கூடவுள்ளது. இன்றைய கூட்டத்தின் பின்னர் தமிழரசு கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்தை கூட்டுவது தொடர்பிலும் தீர்மானிக்கப்படும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இம்முறை தேர்தலில் ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை மட்டுமே பெற்றுக்கொண்டது. அதற்கு அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் விசேட வர்த்தமானியிலும் வெளிவந்துள்ளது.
எனினும் தேசிய பட்டியல் உறுப்புரிமைக்கு தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நியமிக்கப்பட வேண்டுமென தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இவ்வாறான நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் தமிழரசு கட்சி அரசியல் குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.