fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையின் 9வது பாராளுமன்றத்தின் பிரதமராக திரு மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் (PHOTOS)

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2020 11:51

இலங்கையின் 9வது  பாராளுமன்றத்தின் பிரதமராக திரு மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் (PHOTOS)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 28வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமஹா விகாரையில் இன்று முற்பகல் இடம்பெற்றது. அதற்கமைய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நான்காவது முறையாக இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடு முழுவதும் 145 ஆசனங்களை பெற்று அமோக வெற்றிப்பெற்றது. அதற்கமைவாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 விருப்ப வாக்குகளை பெற்றிருந்தார். இந்நிலையில் இன்று அவர் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அரைநூற்றாண்டு அரசியல் வாழ்வில் பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக, பிரதமராக, ஜனாதிபதியாக என நாட்டு மக்களுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தன்னுடைய அர்ப்பணிப்பான சேவையை நாட்டுக்கு தேவையான நேரத்தில் வழங்கிய முக்கிய தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போற்றப்படுகிறார்.

2005 மற்றும் 2010ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு அவர் இரு முறை இலங்கையின் ஜனாதிபதியாகவும் தெரிவுசெய்யப்பட்டார். 50 வருட அரசியல் வாழ்வில் இன்னும் மக்கள் மத்தியில் வசீகரம் குறையாத, மக்களால் நேசிக்கப்படுகின்ற உன்னத தலைவராக மஹிந்த ராஜபக்ஷ காணப்படுகிறார். கடந்த 2004ம் ஆண்டு முதன்முறையாக பிரதமராக பதவியேற்றார். பின்னர் கடந்த 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பிரதமராக பதவியேற்றார். 52 நாட்களின் பின்னர் ஜனநாயகத்தை மதித்து அவர் இராஜினாமா செய்தார். பின்னர் கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாப்ய ராஜபக்ஷ அவர்கள் வெற்றிப்பெற்றதன் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். தற்போது மீண்டும் முழுமையான மக்கள் ஆணையை பெற்று, நான்காவது முறையாக இன்று களனி ரஜமஹா விகாரையில் வைத்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றார். அதற்கமைய இலங்கையில் இரண்டு முறை ஜனாதிபதியாகவும், நான்கு முறை பிரதமராகவும் தெரிவான பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

சத்தியப்பிரமாணத்தின்போது உறுதிமொழி வழங்கிய பிரதமர் இலங்கை தேசத்திற்குள் இன்னொரு இராச்சியத்தை உருவாக்க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இலங்கைக்குள்ளோ அல்லது அதற்கு வெளியிலோ ஒத்துழைப்பு வழங்குதல், உதவிகளை வழங்குதல், அனுசரணை வழங்குதல், நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட எந்த விடயத்தையும் மேற்கொள்ள மாட்டேன் என தான் உறுதிமொழி வழங்குவதாக குறிப்பிட்டார். இலங்கை ஜனநாய சோசலிய குடியரசின் பிரதமராக அரசியலமைப்புக்கும், சட்டத்திற்கும் உட்பட்டு இலங்கை நாட்டுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் செயற்பட்டு தாய்நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் பிரதமர் உறுதி வழங்கினார்.

பதவியேற்பின் பின்னர் அவர் விசேட மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் பதவியேற்றுள்ள நிலையில் புதிய அமைச்சரவை எதிர்வரும் புதன்கிழமை பதவியேற்குமென அறிவிக்கப்படுகிறது. இம்முறை 26 உறுப்பினர்களை கொண்டதாக அமைச்சரவை அமையுமென அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

               

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2020 11:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க