புனித பூமியான களனியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பதவி ஏற்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
Related Articles
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 14வது பிரதமராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷவின் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க களனி ரஜமஹா விகாரையில் நாளை காலை 8.30 மணிக்கு பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ள 4 வது சந்தர்ப்பம் இதுவாகும். இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கவுள்ளது. புதிய பாராளுமன்றம் எதர்வரும் 20ம் திகதி கூடவுள்ளது.
இதேவேளை 2020 பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அபார வெற்றிபெற்றுள்ளது. வெளியிடப்பட்ட முடிவுகளுக்கமைய 68 இலட்சத்து 53 ஆயிரத்து 693 வாக்குகளை பெற்று 128 ஆசனங்களை கைப்பற்றி தனிகட்சியாக ஆட்சி அமைக்ககூடிய வரலாற்று சாதனையையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி படைத்துள்ளது. 17 தேசிய பட்டியல் உறுப்பினர்களுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 145 உறுப்பினர்களை தம்வசப்படுத்தியுள்ளது. பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியாக ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள் பெற்றுக்கொண்ட 6 ஆசனங்களுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 151 ஆசனங்களுடன் 3 இல் 2 பெருபான்மை பலத்தை பெற்றுள்ளது.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகவும் குறுகிய காலத்தில் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கைப்பற்றி ஆட்சியமைக்கும் பெரும்பான்மை அதிகாரத்தை வென்றுள்ளமை விசேட அம்சமாகும்.
கட்சியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டார். அவர் மொத்தமாக 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 வாக்குகளை பெற்று, வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். இலங்கை பொதுத்தேர்தல் வரலாற்றில் எந்தவொரு வேட்பாளரும் இதுவரை பெற்றுக்கொள்ளாத விருப்பு வாக்கு எண்ணிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.