பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வெற்றி முழு நாட்டையும் பாரிய வெற்றிப் பாதையில் இட்டுச்செல்லும் : பிரதமர்
Related Articles
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வெற்றி முழு நாட்டையும் பாரிய வெற்றிப் பாதையில் இட்டுச்செல்லும் சந்தர்ப்பமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன தொடர்பில் நம்பிக்கை வைத்து மாபெரும் வெற்றிக்காக வாக்களித்த சகலருக்கும் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வெற்றியானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியெனவும் நாடு பெற்றுக்கொண்ட பாரிய வெற்றியெனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் உலக நாடுகள் ஸ்ததம்பிதம் அடைந்துள்ள காலப்பகுதியில் மக்கள் தொடர்பில் நம்பிக்கை வைத்து தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மோசமான சூழ்நிலையில் மக்கள் வாக்களிக்க முன்வந்தமை தொடர்பில் நாடு என்ற ரீதியில் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
நோய்த் தொற்று பரவலுக்கு மத்தியில் ஜனநாயக தீர்மானங்களை மேற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கு முன்வந்த நாடுகளில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. வாக்களிக்க வருகை தந்த சகலரும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை உரியமுறையில் நிறைவேற்றி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவும் சுகாதார துறையினரும் பாதுகாப்பு தரப்பினரும் அரச அதிகாரிகளும் ஊடகங்களும் வழங்கிய ஒத்துழைப்பிற்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். உண்மையான வெற்றி சவால்களுக்கு மத்தியிலேயே கிடைக்கப்பெறுகின்றது. இந்த வெற்றி இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையை மீள கட்டியெழுப்புவதற்கு கிடைக்கப்பெற்ற வெற்றியெனவும் இதன் ஊடாக சௌபாக்கிய எண்ணக்கருவை உறுதிப்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்பதை உலகிற்கு எடுத்து காட்ட முடிந்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை 2020 பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வெற்றியை அடுத்து பிரதமருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தங்காலை கால்டன் இல்லத்திற்கு பெரும் எண்ணிக்கையிலானோர் வருகைதந்தவண்ணமுள்ளனர். கால்டன் இல்லத்திற்கு வருகைதந்த மகாசங்கத்தினர் பிரித் பாராயணங்களை ஓதி பிரதமருக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.
இதேவேளை பொதுஜன பெரமுனவின் தேர்தல் வெற்றியை அடையாளப்படுத்தும் வகையில் கொழும்பிலுள்ள தாமரைக் கோபுரம் வர்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.