ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தில் பணிப்புரிந்த 13 அதிகாரிகளும் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்த போதைப்பொருள் விற்பனை தொடர்பாக மேலும் பல தகவல்கள் வழக்கு விசாரணையின் போது தெரியவந்துள்ளன.
வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தேகநபர்கள் கொரோனா தொற்று காரணமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லையென சிறைச்சாலை அத்தியட்சகர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். இதன்போது விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்தது. திணைக்களம் சார்பில் ஆஜரான அரச பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் போதைப்பொருள் கடத்தலில் சந்தேகநபர்கள் தொடர்புப்பட்டுள்ள விதம் குறித்த சாட்சிகளை ஒரு சாராம்சமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தில் ஒப்படைக்கப்பட்ட 280 கிலோ 500 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் 46 கிலோ 500 கிராம் அசீஸ் போதைப்பொருள் ஆகியவற்றை இந்த சந்தேகநபர்கள் தவறாக பயன்படுத்திய விதம் குறித்த சாட்சியங்கள் மூலம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.
இந்த போதைப்பொருள் கடத்தல் மூலம் ஒரு சந்தேகநபர் பத்து இலட்சம் ரூபா முதல் 17 இலட்சம் ரூபா வரை சம்பாதித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதுவரை கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் உதார சத்துரங்க என்பவரிடம் இருந்து நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வாகனங்கள் தொடர்பாக அரச பகுப்பாய்வாளரின் கண்காணிப்பு அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அரச பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் குறித்த வாகனங்களின் சாரதியின் ஆசனத்துக்கு இணைவாக உள்ள முன்புற ஆசனத்தின் கீழ் பகுதியிலும் வாகனத்தின் பின்புறமுள்ள மேலதிக சக்கரம் வைக்கப்படும் இடத்திலும் போதைப் பொருள் மற்றும் மோப்பின் அறிகுறிகள் காணக்கிடைப்பதாக அரச பகுப்பாய்வாளர் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் முற்றுகைகளுக்கு என இந்த சந்தேகநபர்கள் குறித்த வாகனங்களை பயன்படுத்தியிருந்தால் அந்த வாகனங்களின் மறைவான பகுதிகளில் அவற்றை வைத்து எடுத்துச் செல்வதற்கு வேண்டிய தேவை இருக்கவில்லையென்றும் வழியுறுத்திய அரச பிரதி சொலிசிட்டர் ஜெனர் இதுவொரு சந்தேகத்திற்கு இடமான நிலையென சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சந்தேகநபர்கள் போதைப்பொருள் கடத்தல்களுக்கு மேலதிகமாக சர்வதேச கடத்தல்காரர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அவ்வாறு பெற்று கொள்ளப்பட்ட துப்பாக்கியொன்று இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான லயனல் ஜயரட்ன என்பவரிடம் இருந்து மீட்கப்பட்டதாகவும் திலீப்ப பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிக்கு சமனான மேலும் 4 துப்பாக்கிகள் கடந்த சனிக்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அத்திடிய பகுதி வயல் ஒன்றில் இருந்து கண்டெடுத்ததாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சந்தேகநபர்களிடம் இருந்த துப்பாக்கிகள் பாதாள உலக செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தில் இருந்து அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்ட 23 பக்கட் ஹெரோயின் போதைப்பொருட்களுள் 22 பக்கட்டுக்கள் வெட்டி அகற்றப்பட்டிருந்ததை அரச பகுப்பாய்வாளர் அவதானித்துள்ளார். கைப்பற்றப்பட்டு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்துக்கு எடுத்துச்செல்லப்படும் ஹெரோயின் அங்கு தடயப்பொருள் அறையில் ஒப்படைப்பதற்கு முன்னர் இந்த சந்தேகநபர்கள் ஒரு வகையான பதார்த்தத்தை கலந்துள்ளதாகவும் அரச பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருட்களுள் ஒரு பகுதியை இவர்கள் விற்பனை செய்யும் நோக்கில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தில் இருந்தவர்கள் இவ்வாறு மேலதிகமாக ஒரு பதார்த்தத்தை கலந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்பதார்த்தம் தொடர்பாக அரச பகுப்பாய்வாளர் அறிக்கையொன்றை கோருமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டார். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பெருமளவு பணத்தை முதலீடு செய்து இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அவர்களுக்கு சமீபமாக உள்ளவர்கள் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்கியுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. அவ்வாறு தகவல்களை வழங்குவோருக்கு இந்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக சந்தேகநபர்கள் பல இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் உதாரணங்களை முன்வைத்த அரச பிரதி சொலிசிட்ட ஜெனரல் பம்பலபிட்டி பகுதியில் அண்மையில் 400 இலட்சம் ரூபாவுக்கும் கூடுதலான பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட போது தகவல்களை வழங்கியவருக்கு 100 இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்தேகநபரிடம் இருந்து போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டியதாக கூறப்படும் 27 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவை நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ள கணக்கில் வைப்பிலிடுமாறும் விடுத்த கோரிக்கைக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். இந்த 13 பேருக்கும் பிணை வழங்குமாறு பிரதிவாதிகள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இதேநேரம் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை மூலம் திரட்டிய பணம் மோசடி செய்யப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தற்போது விளக்கமறியலில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு முறைப்பாடு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, அப்போது அரச பிரதி சொலிசிட்ட ஜெனரல் திலிப்ப பீரிஸ் நீதிமன்றத்தில்விளக்கமளிக்கையில் பொலிஸ் போதை பொருள் தடுப்பு பணியக அதிகாரியான சமன் குமார ஜயசிங்க எனும் சந்தேகநபரின் வங்கி கணக்கில் 53 சந்தர்ப்பங்களில் 2 கோடி 41 இலட்சத்து 95 ஆயிரத்து 580 ரூபாவை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் சந்தேகநபருடன் நெருக்கமாக பழகும் சுமேத பீரிஸ் என்பவரிடம் இருந்து ஒரு தொகை தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் போலி ஐயாயிரம் ரூபா பெறுமதியான 32 நாணய நோட்டுக்களும் கைப்பற்றப்பட்டு அவை மேலதிக விசாரணைகளுக்கு என மத்திய வங்கிக்கு அனுப்ப உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.