எம்பிலிப்பிட்டி கடதாசி தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை கண்டறியும் பொருட்டு அமைச்சர் விமல் வீரவன்ச அங்கு விஜயம் செய்தார்.
எம்பிலிப்பட்டி கடதாசி தொழிற்சாலையானது பல வருடங்களாக மூடப்பட்டிருந்தது. உள்நாட்டு பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்புச் செய்த இத்தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்கமையவே இது குறித்து கண்டறிவதற்காக அமைச்சர் விமல் வீரவன்ச அங்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
“வாழைச்சேனை கடதாசி ஆலையிலிருந்து முதலாவது உற்பத்தி தொகுதியான 50 தொன் அளவிலான உற்பத்தி இம்மாத இறுதியில் சந்தைக்குவிடப்படும். எம்பிலிப்பிட்டி கடதாசி ஆலையை விட வாழைச்சேனை கடதாசி ஆலையானது மிக மோசமான நிலையில் காணப்பட்டது. இங்குள்ள இயந்திர உபகரணங்கள் சிறந்த நிலையில் காணப்படுகின்றன. புனரமைப்பு பணிகளை மேற்கொண்டால் இங்கும் உற்பத்தி பணிகளை தொடர முடியும். இங்குள்ள மின்சார தொகுதி தற்போது திருத்தப்படவேண்டியுள்ளது. இது குறித்த அறிக்கையொன்று அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அமைச்சரவையின் அனுமதியுடன் இன்னும் ஓரிரு மாதங்களுக்கு இத்தொழிற்சாலையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.”
இத்தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலம் மாதந்தோறும் 1500 தொன் கடதாசியை தயாரிக்க முடிவதுடன் பல்வேறு தொழில்வாய்ப்புக்களும் உருவாக்கப்படுமென தேசிய கடதாசி கம்பனியின் தலைவர் விமல் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.