புத்தளம் – ஆசிரிகம பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். லோமு முதியன்சலாகே சோமியன் அலோசியஸ் எனும் 41 வயதான சந்தேகநபர் தொடர்பில் தகவல் அறிந்தால் 119 எனும் துரித தொலைப்பேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்க முடியும். 0718 591 292 அல்லது 0322 265 222 அல்லது 0322 265 422 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 15ம் திகதி ஆசிரிகம பகுதியில் அதிக ரத்த பெருக்கு காரணமாக சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பிள்ளைக்கு பாம்பு கடித்து விட்டதாக பிள்ளையின் தாய் வைத்தியசாலை தரப்பினரிடம் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, சதீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதும் சிறுமி உயிரிழந்துள்ளார். அதனையடுத்து, சிறுமி கொடூரமான முறையில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் தாய்வுடன் தவறான தொடர்பை பேணி வந்த நபரே குற்றச்செயலுக்கு காரணமென தெரியவந்துள்ளது. அவர், தப்பி சென்றுள்ள நிலையில், கைதுசெய்ய பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.