fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

IDH வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் தேசிய வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் வைத்து கைது..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2020 19:49

IDH வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் தேசிய வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் வைத்து கைது..

ஐ.டி.எச் வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்ற நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்தவர் என சுகாதார பிரிவு தெரிவிக்கிறது.

முஹமட் ஹசீம் முஹமட் நசீம் எனும் 41 வயதுடைய குறித்த நபர் திருகோணமலை சீனன்குடா மாபிள்பீச் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கடுமையாக போதைப்பொருளுக்கு அடிமையான குறித்த நபர் குற்ற விசாரணைகளுக்காக தேவைப்படும் சந்தேக நபர் என பொலிசார் தெரிவிக்கின்றனர். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன்போது இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார். சம்பவத்தை அறிந்த பொலிசார் உடன் செயற்பட்டனர். மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய ஐ.டி.எச் கோத்தட்டுவ பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் இவரின் புகைப்படத்தை உடனடியாக ஊடகங்களுக்கு பொலிசார் வழங்கினர். ஊடகங்களில் வெளியான புகைப்படத்தை பார்த்த கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் வெளிநோயாளர் பிரிவுக்கு அருகில் வைத்து சந்தேக நபரை அடையாளம் கண்டனர்.

பின்னர் பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த கொரோனா தொற்றாளர் கைதுசெய்யப்பட்டார். இதுதொடர்பில் மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

(இலங்கை பொலிசார் சார்பில் அனைவருக்கும் நாம் நன்றி தெரிவிக்கின்றோம். தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் இருவர் இணையத்தளம் ஊடாக குறித்த சந்தேக நபர் தொடர்பில் இலங்கை பொலிசாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய நாங்கள் அவரை கைதுசெய்தோம். தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் ஊடாக உட்செல்ல முயற்சித்த போது புகைப்படம் ஊடாக இந்நபரை குறித்த இருவரும் அடையாளம் கண்டுள்ளனர். பின்னர் அவரிடம் கேள்வி கேட்டபோது நான் தான் இவ்வாறு தப்பிவந்த நபர் என அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊடாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய பொலிஸ் தலைமையகம் குறித்த வெளிநோயாளர் பிரிவு ஊழியர்கள் இருவருக்கும் பணப் பரிசு வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளது. இந்த விடயத்திற்கு வழங்கிய ஊடகங்கள் உள்ளிட்ட சகலருக்கும் நாம் இந்தவேளையில் நன்றி தெரிவிக்கின்றோம். இவர்களின் ஒத்துழைப்பின் ஊடாகவே சமூகத்தில் ஏற்படவிருந்த பாரிய ஆபத்து குறுகிய காலத்தில் தடுக்கப்பட்டது.

இதேவேளை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி குறித்த நோயாளர் மீண்டும் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2020 19:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க