குருநாகல் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடத்திற்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு விசேட நிபுணர்கள் குழுவொன்று தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் தலைமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
13 ம் நூற்றாண்டுக்குரிய குருநாகல் ராசதானிக்குரிய ராஜ சபையின் மண்டபமாக கருதப்படும். தொல்பொருள் முக்கியவத்துவம் வாய்ந்த கட்டிடத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சேதம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கவனம் செலுத்தியுள்ளார். குறித்த கட்டிடத்திற்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கலாசார அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்தரவினால் விசேட நிபுணர்கள் குழுவொன்று ஸ்த்தாபிக்கப்பட்டது. அதன் தலைவராக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க நியமிக்கப்பட்டார்.
குருநாகல் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.ரத்நாயக்க தொல்பொருள் துறை பேராசிரியர் ரி.பி.குலத்துங்க கலாசார அலுவல்கள் அமைச்சின் பிரதி பணிப்பாளர் பிரசாத் ரணசிங்க மற்றும் கலாசார நிதியத்தின் பணிப்பாளர் சுமேதா மாத்தொட்ட ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் ஆவர். குருநாகல் நகரத்திலுள்ள சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ள குறித்த கட்டிடம் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.