பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு 5 வது நாளாக இடம்பெற்றுவருகிறது. காலை 9 மணிக்கு வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகின. பொலிஸ் நிலையங்கள் முப்படை, சிவில் பாதுகாப்பு துறை, சுகாதார பிரிவு, மாவட்ட செயலக காரியாலயங்கள் தேர்தல் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் இன்றைய தினம் வாக்களிப்பில் கலந்துகொள்ள முடியுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் தபால்மூல வாக்களிப்பை பதிவு செய்யாத அதிகாரிகள் எதிர்வரும் 20 ம் மற்றும் 21 ம் திகதிகளில் தமது வாக்குகளை வழங்க முடியும். இம்முறை தபால்மூல வாக்களிப்பில் கலந்துகொள்ள 7 இலட்சத்து 50 ஆயிரத்து 85 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரச சேவையாளர்கள் எதிர்வரும் 4 ம் திகதி வரை தமது வாக்குளை வழங்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள ராஜாங்கணை பிரதேசம் மற்றும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்கியுள்ள அரச சேவையாளர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும். தனிமைப்படுத்தலை நிறைவு செய்ததன் பின்னர் தமக்கு இலகுவான திகதியொன்றை தபால்மூல வாக்கை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.