கந்தகாடு பகுதியில் கொத்தணியாக கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காணப்படும் அவதான நிலை குறித்து மறக்க வேண்டாமெனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நோய் தொற்று குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“இதுவரை கந்தகாடு மற்றும் சேனபுர ஆகிய இரண்டு முகாம்களலிருந்து 428 சிறைக்கைதிகள் கொவிட் 19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இந்த முகாம்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் 44 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். முகாம்களுக்கு உள்ளே உள்ள சிறைக்கைதிகள் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை. எனினும் ஊழியர்கள் அடையாளப்படுத்தப்பட்டு மீள அழைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே லொக்டவுன் அல்லது ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி இந்த செயற்பாட்டை முன்னெடுத்திருந்தோம். எனினும் இன்று வழமையான செயற்பாடுகளுக்கு மத்தியிலேயே இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளோம். கடந்த காலங்களை போலல்லாமல் பிரச்சினைகளும் சிக்கல்களும் அதிகமாக இருக்கின்றன. இதில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. எனினும் இந்த நோய்த்தொற்று தொடர்பில் பல்வேறு கட்டுக்கதைககள் காணப்பட்டாலும் இது நாடு முழுவதும் பரவவில்லை. ஒருசில பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது. நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம். கந்தகாட்டில் இனங்காணப்பட்ட ஒட்டுமொத்த குழுவையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். மீண்டும் இந்த குழுவினர் கட்டுப்படுத்தப்பட்டவுடன் எல்லாவற்றையும் மறந்து விட்டு செயற்படாமல் மிகவும் சிந்தித்து தங்களது. அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.”
[ot-video type=”youtube” url=”https://youtu.be/uQlHyl3Q9XU”]
நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது.
கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையை அடுத்து அங்கு பணியாற்றும் சகலரும் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் சேவையாற்றிய மேலும் 10 பேரை வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெதிவௌ, சேவாகம ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குறித்த 10 பேர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 33 பேரும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிபடுத்தப்பட்டதையடுத்து அவருடன் குடும்ப உறுப்பினர்க்ள 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர் எஹலியகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்.