2020ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் முதற்கட்டம் இன்று ஆரம்பமாகிறது. இன்றைய தினம் சுகாதார ஊழியர்கள் தபால் மூல வாக்குகளை செலுத்த முடியும். காலை 09.00 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் வாக்களிக்க முடியாத சுகாதார ஊழியர்கள் எதிர்வரும் 20ம், 21ம் திகதிகளில் மாவட்ட செயலக காரியாலயத்தில் அல்லது தேர்தல் காரியாலயங்களில் வாக்களிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனுராதபுரம் ராஜாங்கணை பிரதேச செயலக பிரிவின் தபால் மூல வாக்குப்பதிவு இன்று இடம்பெறாது என அனுராதபுரம் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் மீண்டும் கொவிட்-19 தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்திற்கான தபால் மூல வாக்குப்பதிவுக்காக மாற்று தினமொன்று தேர்தல் ஆணைக்குழுவால் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் அனுராதபுரம் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாவட்ட செயலகம், தேர்தல்கள் செயலகம், பொலிஸார், பாதுகாப்பு படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு இரண்டு தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் வியாழக்கிழமை காலை 09.00 மணிமுதல், மாலை 04.00 மணிவரையும், வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிமுதல், பிற்பகல் 02.00 மணிவரையும் அவர்கள் வாக்களிக்க முடியும். அதனை தவிர ஏனைய அரச ஊழியர்களுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.