தேசிய சொத்துக்களை விற்பனை செய்வது தற்போதய அரசாங்கத்தின் கொள்கை அல்லவென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்கால பரம்பரையினருக்காக தேசிய சொத்துக்களை பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அபிவிருத்திக்காக தேசிய வளங்கள் பயன்படுத்தப்படுமெனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
கடந்த 5 வருடங்களில் நாட்டின் எவ்வித அபிவிருத்தி திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை. தனது அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்தி பணிகள் கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் ஸ்த்தம்பிக்கப்பட்டன. கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியிருந்தால் குறித்த திட்டத்தை தற்போது நிறைவு செய்திருக்க முடியும். நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வகையான அபிவிருத்தி திட்டங்களும் கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கடந்த அரசாங்கம் விற்பனை செய்துள்ளது. தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டன. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்தவேண்டும். தற்போதய ஆட்சியில் தேசிய வளங்கள் பாதுகாக்கப்படும். அவை ஒருபோதும் விற்பனை செய்யப்படமாட்டதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.