போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு விசேட சுற்றி வளைப்புக்கள்
Related Articles
போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு விசேட சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். கடந்த 5 வருடங்களில் 4 ஆயிரத்து 338 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும், அதனுடன் தொடர்புடைய ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 257 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் கடந்த 5 வருடங்களில் 27 ஆயிரத்து 581 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு இலட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆயிரத்து 828 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அதனுடன் தொடர்புடைய 153 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்புபட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 2013 ம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் 61 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் விசேட வேலைத்திட்டங்களை பலவற்றை முன்னெடுத்ததாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.