21ம் நூற்றாண்டின் சிறந்த வீரர் முத்தையா முரளிதரனுக்கு, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகில் பிரபல்யமான விஸ்டன் சஞ்சிகை 21ம் நூற்றாண்டின் சிறந்த வீரராக முத்தையா முரளிதரனை பெயரிட்டுள்ளது. உலகின் முன்னணி கிரிக்கட் ஆய்வு நிறுவனமான கிரிக்விஸ்ஸுடன் இணைந்து விஸ்டன் சஞ்சிகை 21 ம் நூற்றாண்டின் 30 முன்னணி டெஸ்ட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முத்தையா முரளிதரண் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார். 2000 ம் ஆண்டிலிருந்து, 2020 ம் ஆண்டு வரையான தரவுகளை வைத்து குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய 2000 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 2010 ம் ஆண்டு வரை முத்தையா முரளிதரண் 85 டெஸ்ட் போட்டிகளில் 573 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இக்காலப்பகுதியில் அவரை விட முன்னிலையில் இருப்பவர் ஜேம்ஸ் அன்டர்சன் ஆகும் அவர் 2000 ம் ஆண்டு முதல் 2020 ம் ஆண்டு வரை 151 போட்டிகளில் 584 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளதாக விஸ்டன் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. கடந்த 1992 ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முத்தையா முரளிதரண் மொத்தமாக 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
2000 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அவர் ஓய்வுபெற்ற 2010 ம் ஆண்டு வரையான காலத்தில் அவரது பந்து வீச்சு சராசரி 20.92 ஆகும். இக்காலப்பகுதியில் 50 தடவைகள் அவர் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். மேலும் 2000 ம் ஆண்டுக்கு பின்னர் அவர் விளையாடிய 84 போட்டிகளில் இலங்கை அணி 40 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்ததோடு 17 போட்டிகளை சமன் செய்துள்ளது. குறித்த ஆய்வறிக்கையினை அடிப்படையாக வைத்து 21 ம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க டெஸ்ட் கிரிக்கட் வீரர் என்ற மகுடத்தை முத்தைய்யா முரளிதரணுக்கு சூட்டியுள்ளதாக விஸ்டன் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கைக்கு பெருமை சேர்ப்பதற்காக முத்தையா முரளிதரன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார். அவரது சாதனைக்கு மனதார வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.