நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியை மட்டுப்படுத்தியுள்ளதால் பல துறைகளில் உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட வகையில் மக்கள்மயப்பட்ட பொருளாதாரத்திற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையை வெற்றிகொள்வது தொழிலதிபர்களுக்குள்ள தற்போதைய சவாலாகுமென்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். கைத்தொழில் மற்றும் வர்த்தக முயற்சிகளின் அபிவிருத்திக்கான அனைத்து அமைச்சுக்களையும் ஒன்றிணைத்த வகையில் உருவாக்கப்பட்டுள்ள செயலணி மற்றும் பல்துறைசார் தொழிலதிபர்களுடன் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்வாறு தெரிவித்தார்.