ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் 3 பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். நாட்டிற்குள் மீண்டும் கொரோனா வைரஸ் நுழைவதை தடுப்பதே இதன் நோக்கமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமானிநிலையம் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படுமென அமைச்சர் தெரிவித்தார். சுற்றுலா பயணிகள் நாட்டிற்குள் பயணிக்கும் போது பிசிஆர் பரிசோதனை அறிக்கைகளை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமானநிலையத்தில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனை அறிக்கைக்கு அமையவே சுற்றுலா பயணிகள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர்.
சுற்றுலா அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களை மாத்திரமே சுற்றுலா பயணிகள் பயன்படுத்த முடியும். இதேவேளை, சுற்றுலா பயணிகள் தொடர்ந்தும் சுகாதார பிரிவினரால் கண்காணிக்கப்படுவர். அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கம் காலப்பகுதியில் மேலும் இரு பிசிஆர் பரிளேசாதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்களென அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்தார்.